Print this page

“மாமாங்கத்தின் அற்புதம்” - சித்திரபுத்திரன். குடி அரசு - உரையாடல் - 26.02.1933 

Rate this item
(0 votes)

புராணமரியாதைக்காரன் கேள்வி:- ஐயா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். 

சுயமரியாதைக்காரன் பதில்:- என்ன அற்புதமய்யா? 

பு-ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேராய் இருந்தபோதிலும், கூழாயிருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை. இதற்கு பதில் சொல் பார்ப்போம். 

சு-ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான். இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவுசெய்து கேள்க்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள், ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேரு. ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிரமாக ஆகிவிடும். குளிக்கிர ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த் தவம்தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண்பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள். 

பு-ம-அதெப்படி தண்ணீர் விட்டுவிட்டுப்போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது? 

சு-ம:- இதுவும் நல்ல கேள்விதான். பதில் சொல்லுகிறேன். மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில் மறைவே இருக்காது. ஒரு மனிதன் வீட்டைவிட்டுப்புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்து கொள்ளவேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆகவேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார் கள். குளத்தில் இரங்கி துணியை நனைத்துக்கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டரக்கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பர்த்தியாகிவிடும். ஆகவே வரவும். செலவும் சரியாகிவிடும். 

பு-ம:- அந்தப்படி அந்தக் குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா? 

சு-ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத்தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும் குளம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப்பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும். வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை. 

குடி அரசு - உரையாடல் - 26.02.1933

Read 83 times